இந்தியாவின் எல்லைதாண்டிய வரம்புமீறல் பற்றி ஐ.நா.வில் புகார் பாகிஸ்தான் முடிவு

இந்தியாவின் எல்லைதாண்டிய வரம்புமீறல் பற்றி ஐ.நா.வில் புகார் செய்யப்போவதாக பாகிஸ்தான் தீர்மானித்துள்ளது.

காஷ்மீர் புலவாமா தாக்குதலை தொடர்ந்து இந்தியாவின் துரிதமான, துல்லியமான வான் தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் மிகப்பெரிய பயிற்சி முகாம்கள் அழிக்கப்பட்டன. பயங்கரவாதிகள், பயிற்சியாளர்கள், மூத்த தளபதிகள் என அதிக அளவிலான எண்ணிக்கையில் கொல்லப்பட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நேற்று அவசரமாக உயர்நிலை கூட்டத்தை கூட்டினார். இந்த கூட்டத்தில் மக்கள் சமுதாய தலைவர்கள், ராணுவ தலைவர் ஜெனரல் காமர் ஜாவித் பாஜ்வா உள்ளிட்ட ராணுவ தலைவர்கள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி இந்தியாவின் தாக்குதல் குறித்தும், தற்போது அங்குள்ள சூழ்நிலை குறித்தும் விளக்கினார்.

பின்னர் கூட்டத்தில், ‘‘இந்தியாவின் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டிய வரம்புமீறல் குறித்து உடனடியாக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் நட்பு நாடுகளிடம் புகார் தெரிவிப்பது’’ என தீர்மானிக்கப்பட்டது. சர்வதேச அமைப்புகளிடம் இந்த பிரச்சினையை எழுப்பும் வகையில் அவர்களை தொடர்புகொள்ளும் நடவடிக்கைகளில் வெளியுறவு மந்திரி குரேஷி ஈடுபடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதோடு நாடாளுமன்றத்தில் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் கூட்டுக்கூட்டத்தை நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

உயர்நிலை கூட்டத்தையொட்டி முன்னதாக வெளியுறவு மந்திரி குரேஷி தனது அலுவலகத்தில் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். இந்த கூட்டம் முடிந்ததும் அவர் கூறும்போது, ‘‘தற்காப்பு நடவடிக்கையில் ஈடுபடவும், இந்தியாவின் தாக்குதலுக்கு பதிலடியாக திருப்பி தாக்கவும் பாகிஸ்தானுக்கு உரிமை உள்ளது’’ என்றார்.

தேசிய பாதுகாப்பு குழுவின் சிறப்பு கூட்டத்தையும் பிரதமர் இம்ரான்கான் கூட்டினார். அந்த கூட்டத்தில் அவர் கூறும்போது, ‘‘ஆயுத படைகளும், பாகிஸ்தான் மக்களும் எந்த நடவடிக்கைகளுக்கும் தயார்நிலையில் இருக்க வேண்டும்’’ என்றார்.

தேசிய பாதுகாப்பு குழு, இந்தியா அறிவிப்பின்றி ஒரு தாக்குதலை நடத்தியுள்ளதால், இதற்கு பாகிஸ்தான் உரிய நேரத்தில், உரிய பதிலடி தரும் என்ற முடிவுக்கு வந்துள்ளது.

தந்தி

Leave a Reply

Your email address will not be published.