3 பிரிவுகளின் கீழ் பரிசுகளை வென்று சாதனை படைத்த அஜித் பணியாற்றிய தக்ஷா குழு!
பெங்களூரு ஏரோ இந்தியா விமானக் கண்காட்சியில் நடைபெற்ற போட்டியில் நடிகர் அஜித் குமார் ஆலோசகராக பணியாற்றிய தக்ஷா குழுவின் விமானம் 3 பிரிவுகளின் கீழ் பரிசுகளை வென்றுள்ளது.
ஏரோ இந்தியா விமானக் கண்காட்சி பெங்களூருவின் பெருமைகளில் ஒன்றாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1996ம் ஆண்டு முதல் இந்தக் கண்காட்சி இங்கு நடைபெற்று வருகிறது. 2017ம் ஆண்டிற்கு பிறகு இந்தக் கண்காட்சி கடந்த 20-ஆம் தேதி தொடங்கியது. ஆசிய பிராந்தியத்தின் மிகப் பெரிய விமானக் கண்காட்சி மற்றும் சாகச நிகழ்ச்சி இங்கு நடைபெறுவது வழக்கம்.
இதில் 22 நாடுகளின் 61 போர் விமானங்கள் பங்கேற்று சாகச நிகழ்ச்சிகள் நடத்தின. மேலும் விமான தொழில்நுட்பம் தொடர்பான 365 நிறுவனங்களின் கண்காட்சியும் நடைபெற்றது. இந்த கண்காட்சியில் நடத்தப்பட்ட போட்டிகளில் நடிகர் அஜித் குமார் ஆலோசகராக பணியாற்றிய தக்ஷா குழுவின் விமானம் 3 பிரிவுகளின் கீழ் பரிசுகளை வென்றுள்ளது.
ஹைபிரிட் கண்காணிப்பு வடிவமைப்பு பிரிவில் (Surveillance: Hybrid Design 4-20 Kg) அஜித்தின் தக்ஷா டீம் தங்கப் பதக்கம் வென்று ரூ..3 லட்சம் பரிசை வென்றுள்ளது. அதே போல் Surveillance: Fixed VTOL பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று ரூ.1.5 லட்சம் பரிசுத்தொகையும், Flying Formation Challenge பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று ரூ.3 லட்சம் பரிசுத்தொகையையும் வென்று சாதனை படைத்துள்ளது. பங்கேற்ற 3 பிரிவு போட்டிகளிலும் வென்று தக்ஷா குழு பரிசுகளை வென்றுள்ளது.
சென்னை எம்.ஐ.டி-ல் உள்ள ‘தக்ஷா’ என்ற மாணவர்கள் அணியுடன் ஆளில்லா விமானத்திற்கான பணியில் இணைந்து கடந்த 10 மாதங்களாக அஜித்குமார் ஆலோசகராக பணியாற்றினார். ஆளில்லா ஏர் டாக்சி என்ற கருவுடன் தயாரிக்கப்பட்ட இந்த ஆளில்லா விமானம் அவசர காலங்களில் ஒருவரை சுமந்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.