பாரத் கே வீர் இணையதளம் மூலம் இதுவரை ரூ.18 கோடிக்கும் மேல் நிதியுதவி

பாரத் கே வீர் இணையதளம் மூலம் இதுவரை ரூ.18 கோடிக்கும் மேல் நிதியுதவி

காஷ்மீர் தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் குடும்பங்களுக்காக பாரத் கே வீர் இணையதளம் மூலம் இதுவரை ரூ.18 கோடிக்கும் மேல் நிதி சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் பாது‌காப்புப் படையினர் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதி ஒருவன் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினான். இந்த கொடூரத் தாக்குதலில் 40 வீரர்கள் உயிர்த் தியாகம் செய்தனர். அவர்களது உடல்கள் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இந்த தாக்குதலையடுத்து, பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் தயாராகிவருகிறது. ராணுவத்திற்கு முழு அதிகாரத்தையும் வழங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்

இதற்கிடையே உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் சார்பாகவும், சொந்த விருப்பத்தின் பேரில் பலரும் நிதி உதவி அளித்து வருகின்றனர். தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த இரு வீரர்களின் குடும்பங்களுக்கும் தலா ரூ.20 லட்சம் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டது. மேலும் வீரர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அளிக்க விரும்புவோர் https://bharatkeveer.gov.in என்ற இணையதளத்துக்கு சென்று நிதியுதவி அளிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்தது.

இதனையடுத்து பலரும் பாரத் கே வீர் இணையதளம் மூலம் நிதியுதவி அளித்து வருகின்றனர். அதன்படி கடந்த 3 நாட்களில் ரூ.18 கோடிக்கும் மேல் நிதியுதவியை மக்கள் அளித்துள்ளதாக பாரத் கே வீர் இணையதளத்தின் மேற்பார்வையாளர் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்த அவர், இணையதளம் மூலம் தொடர்ந்து, மக்கள் நிதியுதவி அளித்து வருகின்றனர். மிகக்குறைந்த நேரத்தில் அதிக நிதியுதவி கிடைத்தது இதுவே முதல்முறை. இதற்காக நாட்டு மக்களுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

வீரர்களுக்கு நிதியுதவி என்ற பெயரில் நிறைய போலி கணக்குகள் தொடங்கப்பட்டு மோசடி நடைபெறுவதாகவும், அதனால் நிதியுதவி அளிக்க விரும்புவோர் https://bharatkeveer.gov.in  என்ற அதிகாரப்பூர்வ பக்கத்துக்குச் சென்று நிதியுதவி அளிக்க வேண்டுமென்றும் அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய ஆயுதப் போலீஸ் படை பிரிவை பராமரிக்கும் வகையில் கடந்த 2017ம் ஆண்டு பாரத் கே வீர் இணையதளம் தொடங்கப்பட்டது. இந்த இணையதளம் மூலம் எப்போது வேண்டுமானாலும் நிதி உதவி அளிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.