Breaking News

ஜம்மு காஷ்மீரில் ஜமாத் இ இஸ்லாமி தலைவர் உள்ளிட்ட 12 பேர் திடீர் கைது: 100 கம்பெனி சிஆர்பிஆப் குவிப்பு

ஜம்மு காஷ்மீரில் ஜமாத் இ இஸ்லாமி அமைப்பின் தலைவர், ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்டோர் நேற்று நள்ளிரவு திடீரென போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

போலீஸாரின் இந்தக் கைது நடவடிக்கை தன்னிச்சையானது. மாநிலத்தில் பதற்றத்தை இன்னும் அதிகரிக்கும் என்று முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், 100 கம்பெனி துணை ராணுவப் படையினர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் என்ன காரணத்துக்காக இவர்கள் குவிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியாமல் பதற்றமான சூழல் நிலவுகிறது.

புல்வாமாவில் கடந்த 14-ம் தேதி ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தினார். இதில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்துக்கு பின் ஜம்மு காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஜம்முவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் விலக்கிக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில், நேற்று காஷ்மீரின் மத்திய, வடக்கு மற்றும் தென் பகுதி மாவட்டங்கில் போலீஸார் திடீரென அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனையில்  ஜமாத் இ இஸ்லாமி அமைப்பின் தலைவர் அப்துல் ஹமித் பயாஸ், ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி அமைப்பின் தலைவர் யாசின் மாலிக் உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர். போலீஸாரின் திடீர் கைது நடவடிக்கையாலும், எதற்காக கைது செய்கிறார்கள், காரணத்தைக் கூறாமல் இருப்பதாலும் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

போலீஸாரின் கைது நடவடிக்கைக்கு முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி ட்விட்டரில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “கடந்த 24 மணிநேரத்தில் ஹுரியத் தலைவர்கள் மற்றும் ஜமாத் அமைப்பின் தொண்டர்கள் போலீஸாரால் காரணமின்றிக் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸாரின் இந்த தன்னிச்சையான செயலைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

இந்த நடவடிக்கை ஜம்மு காஷ்மீரில் மேலும் பதற்றத்தை அதிகரிக்கும். எந்தச் சட்டத்தின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டார்கள். நீங்கள் ஒரு மனிதரைக் கைது செய்யலாம், ஆனால், அவரின் சிந்தனைகளை சிறை வைக்க முடியாது” என மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே ஹூரியத் மாநாட்டு அமைப்பின் தலைவர் மிர்வாஸ் உமர் பருக் போலீஸாரின் கைது நடவடிக்கையைக் கண்டித்துள்ளார். அவர் ட்விட்டரில் கூறுகையில், “ஜம்மு காஷ்மீரில் படைகளைக் குவிப்பதும், வலிமையைக் காட்டுவதும், மிரட்டல் விடுப்பதும் இன்னும் அங்கு நிலைமையை மோசமாக்கும். காஷ்மீர் மக்களுக்கு எதிரான சட்டவிரோதமாக, முரட்டுத்தனமான செயல்கள் வீணானது. உண்மையான சூழலை ஒருபோதும் மாற்றாது” எனத் தெரிவித்துள்ளார். 

The Hindu

Leave a Reply

Your email address will not be published.